இறந்து போன தாயின் உடலுடன் 10 நாள்கள் தங்கியிருந்த மகள் - உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி
இறந்து போன தாயின் உடலுடன் 10 நாள்கள் தங்கியிருந்த மகள் - உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ இந்திரா நகரை சேர்ந்தவர் அங்கிதா தீட்ஷித்(26). இவரின் வீடு கடந்த சில நாள்களாக மூடப்பட்டு இருந்தது. அதோடு அவரின் வீட்டில் இருந்து கெட்ட வாசனை வந்தது. உடனே இது குறித்து பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீஸிற்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து பார்த்த போது கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டிய போது உள்ளே இருந்து பெண் ஒருவரின் குரல் கேட்டது. உடனே கதவை திறக்கும்படி கேட்டனர். ஆனால் அப்பெண் கதவை திறக்கவில்லை. இதனால் கார்பெண்டர் ஒருவரை அழைத்து கதவை திறந்தனர். உள்ளே ஒரு அறையில் அங்கிதா இருந்தார்.
அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். அவரால் சரியாக பேச முடியவில்லை. அவரின் தாயார் பக்கத்து அறையில் இறந்த நிலையில் கிடந்தார். அவர் இறந்து 10 நாள்கள் ஆகியிருக்கும். அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் அங்கிதாவிடம் பேசிய போது ஒரு சில கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்தார். அதில் இறந்து கிடந்தது தாயார் சுனிதா என்று தெரிய வந்தது. சுனிதா எவ்வாறு இறந்தார் என்ற விபரம் தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே இது குறித்து தெரிய வரும் என்று போலீஸார் தெரிவித்தனர். சுனிதா அரசு ஊழியர் என்றும் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்றும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அதோடு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுனிதா தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டார். அதன் பிறகு தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார் என்பது குறிப்பிடதக்கது.
Comments
Post a Comment