\"இவரிடம் தோற்பதே பெருமைதான்!\" 22வது கிராண்ட் ஸ்லாம் வென்ற ரஃபேல் நடால், எக்காலத்திற்குமான ஆச்சர்யம்!2143482800


\"இவரிடம் தோற்பதே பெருமைதான்!\" 22வது கிராண்ட் ஸ்லாம் வென்ற ரஃபேல் நடால், எக்காலத்திற்குமான ஆச்சர்யம்!


2005-ல் அந்த சிறுவனுக்கு வெறும் ஆறு வயதுதான். ஒன்றுமே அறியாத புரியாத ஒருவித மகிழ்ச்சி மட்டுமே நிரம்பிய பருவத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான்.

அதே காலக்கட்டத்தில் டென்னிஸ் உலகில் ஓர் இளம் வீரனும் அறிமுகமானான். ஆரம்பத்திலேயே அதகளங்களை நிகழ்த்தினான். 2005-ல் பிரெஞ்சு ஓப்பனில் தனது முதல் கிராண்ட் ஸ்லாமை வென்று களிமண்ணிலிருந்து ஒரு ராஜ்ஜியத்தை கட்டியெழுப்பத் தொடங்கினான். நாள்கள் நகர்ந்தன. காலங்கள் உருண்டோடின. 2022 வந்துவிட்டது.

ஒன்றுமறியாமல் குழந்தையாகச் சுற்றி திரிந்தானே அந்தச் சிறுவனுக்கு இப்போது 23 வயது. 17 ஆண்டுகளைத் தாண்டி வந்திருக்கிறோம். ஆனால், இன்னமும் களிமண்ணில் அந்த மற்றொரு டென்னிஸ் வீரன் கட்டியெழுப்பிய கோட்டை அதே கம்பீரத்தோடு அப்படியே நிற்கிறது. 2022-லும் இந்த களிமண் களத்தின் ராஜா அவனாகத்தான் இருக்கிறான். இந்த முறையும் பிரெஞ்சு ஓப்பனின் டைட்டில் வின்னர் அவன்தான்! அவரை உயிராக நேசிக்கும் ரசிகர்கள் யாரைப் பற்றி பேசுகிறேன் என்பதை இரண்டாவது வரியிலேயே கண்டுபிடித்திருப்பார்கள். அப்படியில்லாதவர்களுக்காகச் சொல்கிறேன்...

களிமண் கோட்டையை ஆண்டுகொண்டிருக்கும் அந்த அரசனின் பெயர் ரஃபேல் நடால்! எனில் அந்தக் குழந்தை யார்? இந்த கேள்வியை கேஸ்பரூட்டிடம் கேட்டால், `அந்த கொழந்தையே நான்தான்ப்பா' என்பார்.Rafael Nadal ரஃபேல் நடால்

ஆம், 2005-ல் நடால் முதல் முதலாக பிரெஞ்சு ஓப்பனை வென்ற போது கேஸ்பரூட்டிற்கு ஆறே வயதுதான். அந்த கேஸ்பரூட்டே வளர்ந்து டென்னிஸ் பயின்று நடாலுக்கு எதிராக பிரெஞ்சு ஓப்பனின் இறுதிப்போட்டியில் மோதுவதற்கு வந்துவிட்டார். ஒருவேளை கேஸ்பரூட் இந்த இறுதிப்போட்டியை வென்றிருந்தால் 'வேடிக்கை பார்த்தவனின் வெறியாட்டம்' என ஈர்க்கும் வகையில் ஒரு தலைப்பிட்டு தனிக்கட்டுரையே அவரைப் பற்றி எழுதியிருக்கலாம். ஆனால், நடால் அதற்கு அனுமதிக்கவில்லையே! காலத்திற்கும் நம்முடைய பேனாவின் மை நடால் என்கிற பெயரையே எழுதித் தீர்க்க வேண்டும் என எங்கோ விதிக்கப்பட்டிருக்கிறது போல! இந்த முறையும் நடாலை பற்றியே எழுத வேண்டியிருக்கிறது.

டென்னிஸ் உலகின் மும்மூர்த்திகளும் 20 கிராண்ட் ஸ்லாம்களை வென்று ஒரே மட்டத்தில் நின்றபோது, 21-ஐ எட்டி டென்னிஸ் உலகம் இதுவரை பார்த்திடாத அந்தச் சாதனையை நிகழ்த்திக்காட்டப் போவது யார் என்னும் கேள்வி எழுந்த சமயத்தில் ஜோக்கோவிச்தான் அந்தப் பந்தயத்தில் முன்னணியில் இருந்தார். நடாலும் ஃபெடரரும் காயங்களால் அவதியுற்று கொண்டிருந்தனர். இருவரின் ஓய்வு பற்றியும்தான் அதிகம் விவாதிக்கப்பட்டதே தவிர, அந்த 21-ஐ இவர்கள் இருவரில் யாரோ முதலாவதாக எட்ட முடியுமா என்பதெல்லாம் இரண்டாம்பட்சமாகத்தான் இருந்தது.

ஆனால், இன்றைக்கு அந்த கிராண்ட் ஸ்லாம் எண்ணிக்கையை புரட்டிப்பார்த்தால் முன்னும் பின்னும் ஜோக்கோவிச் ஃபெடரர் எனும் பெயர்கள் இணையாக இல்லாமல், தனி ஆளாக நடாலின் பெயரே முதலிடத்தில் இருக்கிறது. "21-ஐ எட்டுவாரா? அவரால் அது முடியுமா? அவரின் கால்கள் அதற்கு ஒத்துழைக்குமா?" என எத்தனையோ கேள்விகள். அத்தனை கேள்விகளையும் ஐயங்களையும் நொறுக்கியிருக்கிறார்.

Rafael Nadal ரஃபேல் நடால்21-ஐ அல்ல 22-ஐ எட்டிவிட்டார். பிரெஞ்சு ஓப்பனை மட்டும் 14வது முறையாக வென்றிருக்கிறார்.

கூடவே ஓடிக்கொண்டிருந்த ஜோக்கோவிச்சையும் ஃபெடரரையும் அதிக தூரம் பின்தங்க வைத்திருக்கிறார்.

இந்த சீசனின் முதல் கிராண்ட் ஸ்லாமான ஆஸ்திரேலிய ஓப்பனையும் நடாலே வென்றிருந்தார். துளைத்தெடுத்த பாத வலியுடன்தான் அந்த வெற்றியை நடால் சாத்தியப்படுத்தியிருந்தார். இங்கேயும் அந்த வலி தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. எதிர்த்து ஆடியவர்கள் நடாலின் ஃபிட்னஸூக்குத் தொடர்ந்து சவாலளித்துக் கொண்டேதான் இருந்தனர்.

Rafael Nadal ரஃபேல் நடால்கடைசிச்சுற்று போட்டியில் ஆலியாசினுக்கு எதிராகக் கடைசி செட் வரை சென்று 4 மணி நேரம் 21 நிமிடங்கள் போராடியே நடால் தனது ட்ரேட் மார்க் வெற்றியை பெற்றிருந்தார். அடுத்து காலிறுதியில் ஜோக்கோவிச்சுக்கு எதிராக 4 மணி நேரம் 12 நிமிடங்கள் போராடியே வென்றிருந்தார்.

அரையிறுதியில் ஸ்வெரெவ் காயமுற்று வெளியேறியிருந்தாலும் இரண்டே செட்களுக்கு மூன்று மணி நேரத்திற்கு மேல் போராட வைத்திருந்தார். வழக்கம்போல நடாலுக்கு வெற்றிகள் எல்லாம் ஓடி ஓடி வியர்வை சிந்தி வலியை சம்பாதித்தே கிடைத்திருந்தது.

ரஃபேல் நடால்: 14வது பிரெஞ்சு ஓப்பன் டைட்டில் வெற்றி; 22வது கிராண்ட் ஸ்லாம் - 36 வயதில் சாதனை! ஜோக்கோவிச்எனக்கு ஆச்சர்யமே இல்லை. நடால் அப்படித்தான். காயமுற்று விழுவார். அடுத்த போட்டியிலேயே 100% உடற்தகுதியோடு வந்து நிற்பார். Rafael Nadal ரஃபேல் நடால்

நடாலிடம் தோற்ற பிறகு, நடாலின் காயங்கள் குறித்து ஜோக்கோவிச் பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படிப் பேசியிருந்தார். வலியை உண்டாக்கிக் கொண்டிருந்த காலை கழற்றி வீசும் சூழல் ஏற்பட்டாலும் இறுதிப்போட்டியில் ஆடியே தீருவேன் என்னும் உத்வேகத்துடன்தான் கேஸ்பரூட்டிற்கு எதிரான போட்டியில் நடால் இறங்கினார்.

ஆனால், இறுதிப்போட்டியில் நடால் அவ்வளவாக போராட வேண்டியிருக்கவில்லை. முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டி அதுவும் களிமண் களத்தில் நடாலுக்கு எதிராக என்னும் போது அது கொடுக்கும் மிரட்சியை கையாள்வதே தனி கலைதான். கேஸ்பரூட்டால் அதைச் சரியாக செய்ய முடியவில்லை. 6-3, 6-3, 6-0 நடால் 2 மணி நேரம் 18 நிமிடங்களிலேயே ஆட்டத்தை முடித்தார்.

மரியானா புவர்தா, தாமஸ் படச், டேவிட் ஃபெரரர், வாவ்ரிங்கா, கெவின் ஆண்டர்சன், டொமினிக் தீம், மெத்வதேவ் இவர்கள் எல்லாம் தங்களின் முதல் கிராண்ட் ஸ்லாம் இறுதிப்போட்டியிலேயே நடாலை எதிர்கொண்டு வீழ்ந்தவர்கள். இந்தப் பட்டியலில்தான் இப்போது கேஸ்பரூட்டின் பெயரும் இணைந்திருக்கிறது. நடால் இவர்களின் கனவுகளைச் சிதைத்தவர். ஆனாலும், இதில் பெரும்பாலானவர்கள் நடாலுக்கு எதிரான தோல்வியை பற்றி வருந்துவதைவிட அந்தத் தருணத்தில் நடாலுக்கு எதிராக நின்று சண்டை செய்ததையே பெருமையாக நினைக்கின்றனர்.

கேஸ்பரூட்கேஸ்பரூட்இறுதிப்போட்டியில் களிமண் களத்தில் நடாலால் வதம் செய்யப்பட்டவர்களில் நானும் ஒருவன். இப்படித்தான் நடக்கும் என முன்பே தெரியும். எதிர்காலத்தில் என்னுடைய பேரன் பேத்திகளிடம் சாட்ரியர் மைதானத்தில் நடாலுக்கு எதிராக நான் இறுதிப்போட்டியில் ஆடினேன் என்பதை பெருமையாக கூறுவேன். அவர்களும் அதை ஆச்சர்யத்தோடு கேட்பார்கள்.

என நடாலுக்கு எதிராகத் தோற்றுவிட்டு கேஸ்பரூட் பேசியிருந்தார்.

இப்போதுமே நடாலின் உடற்தகுதி குறித்து அதிக கேள்விகள் எழும்பிக் கொண்டுதான் இருக்கின்றன. இனியும் தொடர முடியுமா என்பதில் நடாலே கொஞ்சம் முடிவெடுக்காமல்தான் இருக்கிறார். ஆனால், பொறுமையாக இருங்கள். நடால் நிச்சயமாக ஆச்சர்யத்தை நிகழ்த்துவார்!

Rafael Nadal ரஃபேல் நடால்பேரன் பேத்திகளிடம் கண்கள் விரிய புல்லரிப்புடன் சொல்வதற்கு இன்னும் இன்னும் அதிக கதைகளைக் கொடுத்துவிட்டுதான் செல்வார்!

Comments

Popular posts from this blog